இந்தியாவை பாரத் என பெயர் மாற்ற முடியுமா... அரசியலமைப்பு சொல்வது என்ன?
India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறதா, அதற்கு அரசியலமைப்பு அனுமதித்துள்ள வழிமுறைகள் என்ன என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம்.
India vs Bharat: ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகளுக்கு வரும் செப்.9ஆம் தேதி நடைபெற இருந்த இரவு விருத்திற்கான அழைப்பிதழில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை 'President Of India' என குறிப்பிடாமல் 'President Of Bharat' என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் பெயரை இந்தியா என குறிப்பிடாமல் பாரத் என குறிப்பிடப்பட்டதற்கு எதிர்கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா டூ பாரத்
அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் 28 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிக்கு 'INDIA' என பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னரே, மத்திய பாஜக அரசு இந்தியா என்ற சொல்லுக்கு மாற்றாக பாரத் என்ற சொல்லை பிரதானப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்தியா என்பது சர்வதேச அளவில் அழைக்கப்பட்டு வரும் சூழலில் அதனை 'பாரத்' என மாற்றுவது தற்போது அவசியமில்லாத ஒன்று எனவும் இது பல்வேறு குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமிதாப் ட்வீட்
மறுப்புறம், பல்வேறு பிரபலங்கள் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் (தற்போது X) பக்கத்தில்,'பாரத் மாதா கீ ஜே' என குறிப்பிட்டுள்ளது, இதுசார்ந்த அவரின் கருத்தாக பொதுவெளியில் பார்க்கப்படுகிறது. மேலும், பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் வெளிப்படையாகவே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்தியன் ஜெர்ஸியில் பாரத்
இதுசார்ந்து அவர் ட்விட்டர் தளத்தில் பல்வேறு ட்வீட்களையும் பதிவேற்றி வருகிறார். அதில்,"ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரத நாட்டினர், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் மற்றும் நமது உண்மையான பெயரான 'பாரத்'-ஐ அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. நான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வலியுறுத்துகிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் 'பாரத்' என்ற பெயரை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | உலகக் கோப்பையில் பாரத் பெயர் கொண்ட ஜெர்ஸி... வீரேந்திர சேவாக் விடுத்த கோரிக்கை!
இரண்டு பெயர்களும் உள்ளது
இந்நிலையில், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற முயலுமா, இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் என்ன உள்ளது என்பதை இதில் முழுமையாக காணலாம். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-இல், "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1 'இந்தியா' மற்றும் 'பாரத்' இரண்டையும் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர்களாக அங்கீகரிக்கிறது என்பது நினைவில் கொள்ள முக்கியமானதாகும்.
'இந்தியா' என்பதை நீக்கிவிட்டு, 'பாரத்' என்ற ஒரே அதிகாரப்பூர்வ பெயராக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி தான் தற்போது சர்ச்சையின் மூலம் எதிர்கட்சியினர் எழுப்புகின்றனர். குறிப்பாக, இந்தியா என்ற பெயரை மாற்ற வேண்டும் என பேச்சுகள் வருவது 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் புதிதல்ல. அரசியல் தளத்திலும், நீதிமன்றத்திலும் இதுகுறித்த பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பெயர் மாற்ற மனுக்கள்
சமீப காலங்களில், இந்தியா என்ற பெயரை மாற்றக் கோரிய சில பொது நல மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவில்,"இந்தியா என்பதில் இருந்து பாரத் என்று பெயரை மாற்றக் கோரிய அந்த மனு மீது அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதி யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவி பிறப்பித்தது. இதுபோன்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று மனுதாரரிடம் தெரிவிக்கப்பட்டது.
"பாரதமோ அல்லது இந்தியாவோ? நீங்கள் அதை பாரதம் என்று அழைக்க விரும்புகிறீர்களா, அப்படி அழைத்துக் கொள்ளுங்கள். யாராவது இந்தியா என்று அழைக்க விரும்பினால், அவர்கள் அதை இந்தியா என்றே அழைக்கட்டும்" என்று நீதிபதி தாக்கூர் அப்போது கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
அதன் பின் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டில், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று பெயரை மாற்றக் கோரி இதேபோன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அப்போது உச்ச நீதிமன்றம், இந்த மனுவை ஒரு பிரதிநிதித்துவ மனுவாக மாற்றி, உரிய முடிவிற்காக மத்திய அரசுக்கு அனுப்பலாம் என்றும் பரிந்துரைத்தது.
மேலும், அந்த மனு மீது அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே பிறப்பித்த உத்தரவில்,"பாரதம் மற்றும் இந்தியா இரண்டுமே அரசியலமைப்பில் கொடுக்கப்பட்ட பெயர்கள். அரசியலமைப்பில் இந்தியா ஏற்கனவே 'பாரத்' என்று அழைக்கப்படுகிறது" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | INDIA vs BHARAT: இந்தியா பெயரை கேட்டாலே அதிரும் பாஜக - ஸ்டாலின் 'நச்'
அரசியலமைப்பு எவ்வாறு திருத்தப்படும்?
'பாரத்' என்பதை மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பெயராக மாற்ற அரசாங்கம் முடிவு செய்தால், அவர்கள் அரசியலமைப்பின் 1ஆவது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக, 368ஆவது பிரிவு அரசியலமைப்பு சட்டத்தை ஒரு சிறு பெரும்பான்மை திருத்தம் (Simple Majority Changes) அல்லது சிறப்பு பெரும்பான்மை திருத்தம் (Special Majority Changes) மூலம் திருத்த அனுமதிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புதிய மாநிலத்தை அறிவிப்பது அல்லது மாநிலங்களவையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வது போன்ற அரசியலமைப்பின் சில பிரிவுகள், தற்போதுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒரு எளிய பெரும்பான்மையுடன் (அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள்) திருத்தம் மீதான வாக்கெடுப்பை நிறைவேற்றலாம்.
அதேபோன்று, அரசியலமைப்பின் பிரிவு 1-இல் மாற்றம் கொண்டுவருவது உட்பட அரசியலமைப்பின் பிற மாற்றங்களுக்கு, அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சிறப்புப் பெரும்பான்மை (66 சதவீதம்) தேவை என தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஒரு சீப்பை கொடுத்தால் நானே சீவிக்கொள்வேன் - உதயநிதி ஸ்டாலின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ