காவிரி விவகாரம்: டெல்லியில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லியில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி "காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் கடினமான பணி.அது மிகவும் எளிதானது அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் பெரிய பணி. அது எப்போது அமைக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க நான் விரும்பவில்லை’’ என்று கூறி இருந்தார்.
இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழக அரசின் சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆனால், ஏற்கனவே மற்ற நிகழ்சிகளுக்கு பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதால், தற்போது சந்திக்க வாய்ப்பில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பின்னர் மீண்டும் நேற்று முன்தினம், தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசியத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காந்திசிலை முன் அதிமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.