காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக, மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடின. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்குக் கூடுதல் தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதில், கர்நாடகத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மற்ற மாநிலங்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. 


மேலும், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீர் அளவைக் குறைத்து, அதைக் கர்நாடகத்துக்கு ஒதுக்கீடு செய்தது. மேலும், தீர்ப்பு வந்த ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தீர்ப்பை எதிர்த்து எந்த ஒரு தரப்பும் மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தது. 


தீர்ப்பைத் தமிழகம், கர்நாடகா மட்டுமல்ல... மத்திய அரசும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. ஆனால், கர்நாடகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. 


மத்திய நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். காவிரி தொடர்பாகத் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கப் பிரதமர் மறுத்துவிட்டதாகவும் முதலில் நீர் பாசனத் துறை அமைச்சரை சந்திக்கும்படி தமிழக முதல்வருக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 


இந்தநிலையில், சென்னை வந்துள்ள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.


மேலும், ஆறு வாரத்தில் கட்டாயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மத்திய கேபினெட் அமைச்சர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சிரமம் என்கிறார், இணை அமைச்சரோ பணி தொடங்கிவிட்டது என்கிறார். இருவரில் யார் உண்மை சொல்கிறார்கள் என்பது ஆறு வாரம் நிறைவடையும் காலத்துக்குள்ளாக ஆவது தெரிந்துவிடுமா என்று தமிழக விவசாயிகள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.