காவிரி: மக்கள் அமைதி காக்கவேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்
காவிரி விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு நகரில் நேற்று போராட்டக்காரர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை சம்பவங்கள் கட்டுக்கு அடங்காமல் போனதால் பெங்களூரு மற்றும் மைசூரு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கடைகள், ஓட்டல்களும் தாக்கப்ப்பட்டன. கர்நாடகாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பஸ்களை மற்றும் லாரிகளையும் தீ வைத்து கொளுத்தினார்கள்.
இதற்கிடையே மத்திய அரசு 10 கம்பெனிகள் கொண்ட கலவர தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த துணை ராணுவ படையை கர்நாடக மாநிலத்துக்கு உடனடியாக நேற்று அனுப்பியது. ஒரு கம்பெனியில் 100 பேர் என ஆயிரம் பேர் கர்நாடகாவில் கலவரத்தை ஒடுக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெங்களூருவில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்நிலையில் பிரதமர் மோடி கூறியதாவது:- கர்நாடகாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிப்பதாக கூறிய பிரதமர் மோடி, காவிரி விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில மக்கள் அமைதி காக்கவேண்டும். பொறுப்புகளை மனதில் வைத்து இருமாநில மக்களும் செயல்பட வேண்டும். எந்தஒரு பிரச்சனையையும் வன்முறையால் தீர்க்க முடியாது. இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும். நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.