புதுடெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகள்14 மணி நேரம் நீடித்தது. டெல்லியில் அரசின் புதிய மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த சிபிஐ, டெல்லி துணை முதலமைச்சரின் தொலைபேசி மற்றும் கணினியை கைப்பற்றியது. தான் தவறு செய்யவில்லை, அதனால் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும், சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் மணிஷ் சிசோடியா பேட்டியளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ மிக விரிவாக விசாரணை நடத்தியது. மணீஷ் சிசோடியாவின் காரையும் சிபிஐ ஆய்வு செய்தது. மணிஷ் சிசோடியாவின் கணினி, போன் மற்றும் சில கோப்புகளை சிபிஐ கைப்பற்றியுள்ளது. முன்னதாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் நடத்தும் நிறுவனத்திற்கு மதுபான வியாபாரி ஒருவர் ரூ.1 கோடி கொடுத்ததாக சிபிஐ தெரிவித்திருந்தது.


மேலும் படிக்க | டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ ரெய்டு


2021-22 ஆம் ஆண்டுக்கான கலால் வரிக் கொள்கையைத் தயாரித்து செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாகக் கூறி மணீஷ் சிசோடியா மற்றும் 15 பேர் மீது சிபிஐ, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.


14 மணி நேரம் தொடர்ந்த சோதனைகளுக்கு பிறகு, சிபிஐ குழுவினர் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் பிறகு மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசினார். டெல்லி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்த மணிஷ் சிசோடியா, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் நாங்கள் பயப்படவில்லை என்று தெரிவித்தார்.



நாங்கள் முழுமையாக ஒத்துழைத்தோம். விசாரணைக்கு சிபிஐ என்னை அழைக்கவில்லை என்று மணீஷ் சிசோடியா கூறினார். தன்னுடைய கணினி, தொலைபேசி மற்றும் சில கோப்புகளை சிபிஐ எடுத்துச் சென்றுள்ளதாக மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.


மேலும் படிக்க | இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பிரதமரே... ராகுல் காந்தி தாக்கு


இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியாவைத் தவிர, அப்போதைய கலால் ஆணையர் ஆரவ் கோபி கிருஷ்ணா, அப்போதைய கலால் வரித்துறை துணை ஆணையர் ஆனந்த் குமார் திவாரி, உதவி கலால் ஆணையர் பங்கஜ் பட்நாகர், 9 தொழிலதிபர்கள் ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.


சிசோடியாவுக்கு கலால் துறை பொறுப்பும் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்பின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கை தொடர்பாக பாஜகவும், ஆம் ஆத்மியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த நடவடிக்கை கேலிக்குரியது என்று கூறிய ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ராகவ் சட்டா, இந்த 14 மணி நேர சிபிஐ சோதனையில், ஜியோமெட்ரி பாக்ஸ்கள், பென்சில்கள் மற்றும் ரப்பர்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்டல் அடித்தார்.


மேலும் படிக்க | நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யலாம்: ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு


பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்ததில் இருந்து, நாடு முழுவதும் கெஜ்ரிவாலின் அலை பரவி, 130 கோடி மக்களின் இதயங்களில் கெஜ்ரிவால் ஜியின் இடம் பிடித்து வருகிறது என்று கூறிய ராகவ் சட்டா, டெல்லியிலும், பஞ்சாபிலும் ஆக்கப்பூர்வமான வகையில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, சிபிஐயை வைத்து பழி வாங்க நினைக்கிறார்கள் என்றார்.


கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகளை பார்த்து பொறுக்காத மத்திய அரசு, அதைத் தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சிறையில் அடைத்தது. தற்போது மணிஷ் சிசோடியாவை குறி வைத்திருக்கிறார்கள், நல்லாட்சி கொடுக்கும் கெஜ்ரிவாலின் நல்லாட்சியை அழிக்க நினைக்கிறார்கள் என்று ராகவ் குற்றம் சாட்டுகிறார்.


மேலும் படிக்க | பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ