நிரவ் மோடி தப்பிப்பதற்கு வாய்ப்பில்லை: வெளியுறவுத்துறை!
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.11,500 கோடி அளவுக்கு மோசடி செய்த புகாரில் சிக்கிய, நகைக்கடை தொழிலதிபர் நிரவ் மோடி எங்கிருக்கிறார் என்பது பற்றி தெரியாது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, சமீபத்தில் பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பிய அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மோசடி செய்ததாக தேடப்படும் நிரவ் மோடி குடும்பத்துடன், வெளிநாடு தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பண மோசடி வழக்கில் இருந்து, விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் நீரவ் மோடியும் வெளிநாடு தப்பியிருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.
இதனிடையே, நிரவ் மோடி மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.500 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தொழிலதிபர் நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டை சஸ்பெண்ட் செய்து வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், பாஸ்போர்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், நிரவ் மோடியால் எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது. அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறாரோ, அதே நாட்டில்தான் இருக்க முடியும் என்றார்.
மேலும், நிரவ் மோடியுடன் எங்களுடைய எந்தவொரு அதிகாரிக்கும் தொடர்பும் இல்லை. உண்மையில் அவர் எங்கிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.