பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி மற்றும் வேலைவாய்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சியான திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ப்பட்டது.


அதேபோல், தமிழகத்தில் அமலில் இருக்கும் 69% இந்த சட்டத்தால் பதிக்கப்படுமா என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதேப்போன்று இச்சட்டத்திற்கு எதிராகக் காங்கிரஸ் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. 


இந்நிலையில் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீடு முறைக்கு பாதிப்பு வராமல், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிடகோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 


இந்த பதில் மனுவில், மாநிலங்களை பொறுத்தவரை அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் என்றும், இதில் மத்திய அரசின் சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தலையிட முடியாது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.