6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாத பிரதமர் மோடி! உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்
Prime Minister Modi, central intelligence report: பிரதமர் மோடி கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்காக எங்கும் செல்லாதது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு பின்னணியில் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் தான் காரணம் என்கிறது அரசியல் வட்டாரம்.
நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 6 நாட்களாக எங்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாதது பேசுபொருளாகியுள்ளது. மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும் பிரதமர் மோடி, ஏன் 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை? என்ற கேள்விக்கு பின்னணியில் உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரம்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தென்மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும் என உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில் வடமாநிலங்களில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என உளவுத்துறை சொல்ல, உற்சாகத்தில் இருந்த மோடிக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த தேர்தல் பத்திர தீர்ப்பு பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. அதாவது, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் வாங்கியதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட, அதில் பெரும்பாலான பணம் பாஜகவுக்கு சென்றது வெட்டவெளிச்சமானது.
மேலும் படிக்க | VCK: விசிக கேட்ட சின்னத்தை கொடுத்த தேர்தல் ஆணையம்... அதுவும் 2 தொகுதிகளுக்கும்!
இதனால் ஊழல் குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாமல் அப்படியே கப்சிப் மோடுக்கு சென்றுவிட்டது பாஜக. வாரிசு அரசியலை பற்றி பேசலாம் என்றாலும் பாஜகவில் போட்டியிடும் வேட்பாளர்களிலும் பெரும்பாலானவர்கள் குடும்ப அரசியல் பின்னணியை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதால் அந்த பிரச்சாரத்தையும் தீவிரமாக முன்னெடுக்க முடியவில்லை. வட மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம், சிலிண்டர் விலை உயர்வு சமானிய மக்களை கடுமையாக பாதித்திருப்பதால் அவர்கள் மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை உளவுத்துறை ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இதனை எப்படி சரிகட்டுவது என பாஜக மேலிடம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, லேட்டஸ்டாக கொடுத்த ரிப்போர்டிலும் முன்பு கொடுக்கப்பட்ட வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகள் எல்லாம் வெகுவாக குறைந்திருக்கிறது.
இதனால் கடும் அப்செட்டில் மோடி மற்றும் பாஜக மேலிட தலைவர்கள் இருக்கிறார்களாம். அதனால் தான் கடந்த 6 நாட்களாக எங்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி செல்லவில்லை. போதாக்குறைக்கு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த தலைவர்களே தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியது கள எதார்த்ததை உணர்த்திவிட்டதாம். முக்கிய தலைவர்கள் பலர் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியதால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக மேலிடம் தள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சேலம் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட மத்திய அரசின் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் குறித்து சூசகமாக தெரிவித்தார். அந்த ரிப்போர்டில் தோல்விக்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டதாலேயே மோடி பதட்டத்தில் இருக்கிறார் என அவர் விமர்சித்தார். வருமாவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் மோடிக்கு உளவுத்துறை சொல்லிவிட்டதாம். இருப்பினும் எப்படியாவது எதிர்க்கட்சிகளை முடக்கி இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என நினைக்கும் நரேந்திர மோடி, அனைத்து அஸ்திரங்களையும் கையில் எடுக்க தயாராகவே இருக்கிறாராம்.
ஆனால், வடமாநிலங்களில் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் செல்வதும், கூட்டம் கூடுவதும் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்கிறது. இதனால், 400 தொகுதிகளை கைப்பற்றி பிரம்மாண்டமாக ஆட்சி அமைப்போம் என பேசி வந்த பாஜகவினர் அப்படியே கப்சிப் மோடுக்கு சென்றுவிட்டனர். இப்போதைக்கு தென்மாநிலங்களைக் காட்டிலும் வட மாநிலங்களில் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான வியூகங்களை வகுக்க தொடங்கியிருக்கிறது பாஜக. 2014ல் கருப்பு பண மீட்பு பற்றி பேசிய பிரதமர் மோடி, இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதுபற்றி இன்னும் வாயே திறக்கவில்லை. பண மதிப்பிழப்பு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அது ஒரு மோசமான நடவடிக்கை என விமர்சித்திருப்பதுடன் 98 விழுக்காடு பணம் மீண்டும் வங்கிக்கே வந்துவிட்ட நிலையில், எந்த கருப்பு பணத்தை மத்திய அரசு மீட்டிருக்கிறது, ஒழித்திருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பயன்பட்டிருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது சாமானிய மக்களையும் வெகுவாக சென்றடைந்துள்ளது. இதனால், உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும் பாஜக, என்ன செய்வது என தெரியாமல்? என்ன தேர்தல் வாக்குறுதி கொடுக்கலாம்? என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கிறது. இத்தனை பிரச்சனைகள் இருக்கும்போதும், காங்கிரஸ் அடித்து ஆட வேண்டிய அரசியல் களத்தை இன்னும் சரியாக பயன்படுத்த தொடங்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த கமல்! ஈரோட்டில் பின்பாயிண்ட் பேச்சு - பாஜக ரியாக்ஷன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ