மாநில அரசுகளுடன் இணைந்து நக்சலைட்களை ஒழிப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திட்டவட்டம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் நக்சலைட், மாவோயிஸ்டு போன்ற இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், துணை ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.


இக்கூட்டத்தில்,  சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான ஒரு சினெர்ஜி இடதுசாரி தீவிரவாதத்தின் (LWE) பிரச்சினையை திறம்பட தீர்க்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். LWE வன்முறை சம்பவங்கள் குறைந்துவிட்டாலும், அதை முற்றிலுமாக அகற்ற கவனம் செலுத்தப்பட வேண்டும், மேலும் அனைத்து முயற்சிகளையும் மத்திய மற்றும் மாநிலங்கள் முழு வேகத்தில் பராமரிக்க வேண்டும், என்றார்.


இந்த அலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் (பீகார்), நவீன்பட்நாயக் (ஒடிசா), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), ரகுபர்தாஸ் (ஜார்கண்ட்), பூபேஷ் பாகெல் (சத்தீஷ்கார்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா) ஆகியோர் கலந்துகொண்டனர். 10 மாநிலங்களில் எஞ்சிய மேற்கு வங்காளம், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை. 


இது குறித்து அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துதில்; இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் மிகவும் பலனுள்ள வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த மாநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


இடதுசாரி பயங்கரவாதம் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாங்கள் அதனை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 



அமித்ஷா உள்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் இதுபோன்ற கூட்டம் இப்போது தான் முதல்முறையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் பல முதல்-மந்திரிகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தில்; நக்சலைட்களால் 2009-13 காலகட்டத்தில் 8,782 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதில் பாதுகாப்பு படையினர் உள்பட 3,326 பேர் பலியாகி உள்ளனர். 2014-18-ல் 4,969 வன்முறை சம்பவங்களில் 1,321 பேர் பலியாகினர். வன்முறை சம்பவங்கள் 43.4 சதவீதமும், பலியாவது 60.4 சதவீதமும் குறைந்துள்ளது. 2009-2018-ல் 1,400 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் 310 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதில் 88 பேர் பலியாகி உள்ளனர்.


மாவோயிஸ்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு சிறப்பு நிதி உதவியாக வழங்கிவருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.