பிரதமர் மோடி வெறும் 15 தொழிலதிபர்களுக்கு மட்டும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக, ராகுல் காந்தி குற்றச்சாட்டு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சராமா பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் ரமண் சிங் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார். கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி, 15 பணக்கார தொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்த, ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் நிலையில், அதை விட 10 மடங்கு தொகையை பணக்கார தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி தள்ளூபடி செய்தது ஏன் எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அரசின் கருவூல சாவியை தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேருக்கு மட்டுமே பிரதமர் மோடி கொடுத்துள்ளதாக விமர்சித்த ராகுல் காந்தி, விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் பழங்குடியினத்தவரின் கைகளிலேயே அரசின் கருவூல சாவியை கொடுக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் தெரிவித்தார்.


மேலும், குறிப்பிட்ட சாதி, மதம் மற்றும் மாவட்டத்திற்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பணியாற்ற விரும்பவில்லை என்றும், சத்தீஷ்கர் மாநிலத்தின் அனைத்துத் துறைகளுக்கும் பணியாற்றுவோம் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.