வங்கிக் கணக்கில் ரூ.2,410 மட்டுமே வைத்திருக்கும் முதலமைசர்!
திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தனது வங்கிக் கணக்கில் வெறும் 3,930 ரூபாய் மட்டுமே இருப்பு தொகை வைத்திருக்கிறார்.
சமீபத்தில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. முதலமைச்சர் மாணிக் சர்க்கார் திரிபுராவின் தான்பூர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வெறும் 69 வயதுடைய மாணிக் சர்க்கார் தனது வேட்புமனுவில் மொத்தமாக ரூ.3,930 மட்டுமே தன்னிடம் இருப்பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். வங்கி கணக்கில் ரூ.2,410, கையிருப்பில் ரூ.1,520 மட்டுமே வைத்திருப்பதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் மட்டுமே கணக்கு வைத்திருக்கிறார். இதுவரை அவர் வருமான வரி தாக்கல் செய்ததில்லை. நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான முதலமைச்சர் இவர் தான். சொந்தமாக கார், வீடு எதுவும் இவரிடம் இல்லை.
ஒரு முதலமைச்சராக இருப்பவர் ரூ.3,930 மட்டுமே வைத்திருப்பது ஆச்சர்யமானதாக உள்ளது. அதற்கு காரணம், இடதுசாரி தலைவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சம்பள தொகை முழுவதையும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட வேண்டும். கட்சி அவர்களுக்கு அலவன்ஸாக ரூ.5 ஆயிரம் மட்டும் வழங்கும்.
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான தனது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவின் சொத்து மதிப்பினையும் மாணிக் சர்க்கார் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். பாஞ்சாலி பட்டாச்சார்யா கையிருப்பாக ரூ20,140-ம் இரண்டு வங்கி கணக்குகளில் முறையே ரூ.1,24,101 மற்றும் ரூ86,473 வைத்துள்ளார்.
பாஞ்சாலி பட்டாச்சார்யா ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். நிலையான வைப்பு தொகையாக ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.2.25 லட்சம் வைத்துள்ளார். மேலும், 20 கிராம் தங்க நகை வைத்துள்ளார்.