லே/ புதுடெல்லி: இந்திய-சீன படைகள் நேருக்குநேர் அணி திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லடாக் டிவிஷன், சீன எல்லை ஓரம் அமைந்துள்ளது. அங்குள்ள சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், லே பகுதிக்கு 250 கி.மீ. கிழக்கே உள்ள டெம்சோக் செக்டார் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நீர்ப்பாசன கால்வாய் ஒன்றை இந்தியா கட்டி வருகிறது. அப்பணி நடந்து கொண்டிருந்தபோது, நேற்று பிற்பகலில் சீன ராணுவ வீரர்கள் 55 பேர் எல்லையை தாண்டி அத்துமீறி அங்கு] நுழைந்தனர். 


இந்த தகவல் அறிந்து, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த 70 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சீன படைகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். சீன படையினர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு பின்வாங்கி சென்றனர். பின்னர், இரு நாட்டு படைகளும் பனி மலையில் இருந்து கீழே இறங்கி, தரைப்பகுதியில் நிலை கொண்டன.


இதற்கிடையே இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி விளக்கம் அளித்தனர். மோதல் போக்கு எதுவும் உருவாகவில்லை என்றும், இதுபோன்ற ஆட்சேபனைகள் எழுவது வழக்கமானதுதான் என்றும் கூறினர்.


கடந்த 2014-ம் ஆண்டும், லடாக் டிவிஷனில், நிலங் நல்லா என்ற இடத்தில் சிறிய நீர்ப்பாசன கால்வாய் கட்டுவதற்கு சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே முகாமிட்டது.