மாணவி வன்கொடுமை வழக்கு: அரசும், காவல்துறையுமே பொறுப்பு - உயர் நீதிமன்ற உத்தரவுகள் என்னென்ன?

Tamil Nadu Latest News Updates: மாணவிகளின் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது எனவும்,  நிர்பயா நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 27, 2024, 07:49 PM IST
  • விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.
  • முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து விரிவான அறிக்கைக்கு உத்தரவு
  • அப்போது காதல் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்.
மாணவி வன்கொடுமை வழக்கு: அரசும், காவல்துறையுமே பொறுப்பு - உயர் நீதிமன்ற உத்தரவுகள் என்னென்ன? title=

Tamil Nadu Latest News Updates: பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் போலீசாரின் விசாரணையில் குறைபாடு இருப்பதாக தெரிகிறது என்றும் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டாலும், 'சார்' என்று குற்றவாளி ஞானசேகர் யாரை அழைத்தார் என்பது இதுவரை தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே இந்த வழக்கை காவல்துறை விசாரித்தால் முறையாக இருக்காது என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் சிபிஐ விசாரணை கோரி ஏற்கனவே கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இக்கடிதத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தாமாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மனுதாரர்கள் கோரிக்கை

வழக்கு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் இவ்வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இன்று மதியத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: துணை முதல்வர், அமைச்சருடன் குற்றவாளி!!

தொடர்ந்து இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டது சட்டவிரோதம். முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டதை காவல் ஆணையரை ஒப்புக்கொண்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கைது செய்யப்பட்ட நபர் மீது 20 வழக்குகள் உள்ளதாக காவல்  ஆணையர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், அவர் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவையும் மீறி முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இடைக்காலமாக இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.  கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமே உள்ளதாக காவல் ஆணையர்  தெரிவித்துள்ளார். ஆனால் பல வழக்குகள் உள்ளன. அவற்றையும் விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகளின் கேள்வியும், வழக்கறிஞர்களின் பதிலும்...

புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒரு குற்றவாளி தான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார் எனவும் கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றுதான் காவல் ஆணையர் கூறியுள்ளார் என தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது அவர் தப்பி ஓட முயற்சித்ததாகவும் அவரை காவல்துறையினர் விரட்டிச் சென்றபோது தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஊழல் செய்பவர்களுக்கு எதிராக ஏன் பேண்டேஜ் போடமாட்டீகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க | சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - காவல்துறை முக்கிய எச்சரிக்கை

அரசுக்கும் போலீசாருக்கும் உத்தரவு

விசாரணை அதிகாரி காவல் ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர், அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார் என்றும் ஒரு வழக்கில்தான் ஞானசேகருக்கு தொடர்புள்ளது என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. குற்றத்தை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்றும் ஒருவர் கைது செய்ததற்கு பாராட்ட வேண்டும் என எப்படி சொல்ல முடியும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா? என்பது குறித்தும் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் உத்தரவு

மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) என்ன செய்துள்ளது என நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நிர்பயா நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன என்பது குறித்தும் அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு (டிச. 28) தள்ளிவைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளிக்க முன்வந்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், "அந்த பெண்ணை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உலவி வருகிறார். அதை விசாரித்தீர்களா எனவும் கேள்வி எழுப்பினர். அப்போது காதல் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்; ஆண்களுடன் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லக் கூடாது என்றும் பெண் அங்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இதை தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி,"மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் ஆளுங்கட்சி நிர்வாகி கிடையாது. அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 20 வழக்குகளும் 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டவை" என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்ஐஆர் வெளியானதற்கும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கும் காவல்துறையும், அரசும் தான் பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கல்வி நிறுவனங்களில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க அதிரடிப்படை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.

மேலும் படிக்க | ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அமைச்சர் ரகுபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News