தெற்காசிய மண்டலத்தில் அமைதியும் பாதுகாப்பும் நீடிக்க இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி சார்க் நாடுகளின் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

19 வது சார்க் மாநாட்டை பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாதில் நடத்துகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் விடுத்த அழைப்பை அண்மையில் பிரதமர் மோடி நிராகரித்தார். பாகிஸ்தானில் நடத்தப்படும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கான சூழ்நிலை இல்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தெற்காசிய மண்டலத்தில் அமைதி நீடித்திருக்க இந்தியா பூரண ஒத்துழைப்பு அளிக்கும் என்று நேற்று சார்க் நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


சார்க் கூட்டமைப்பை உருவாக்கியதில் பங்கேற்ற இந்தியா முப்பது ஆண்டுகளாக அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்து பயணித்துள்ளது. இதனை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் மோடி, மண்டல அளவிலான கூட்டுறவும் பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக இருக்க அமைதியும் பாதுகாப்பான சூழலும் மிக அவசியம் என்றும் மோடி தமது சார்க் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


சார்க் விதிகளின் படி ஒரு உறுப்பு நாடு பங்கேற்காவிட்டால் கூட அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட அல்லது ஒத்திவைக்கப்பட வேண்டும். இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டதால், இந்தியாவைத் தொடர்ந்து மாலத்தீவு ,நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டில் பங்கேற்க முடியாது என மறுப்புத் தெரிவித்துள்ளன. இதனால் பாகிஸ்தானில் மாநாடு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது சார்க் தின செய்தியில் பதில் அளித்துள்ளார். உறுப்பு நாடுகள் பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இம்ரான்கான், உறுப்பு நாடுகளிடையே தீர்வு காண முடியாதபடி பிரச்சினைகள் வளர்ந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். இதனால் சார்க் உச்சி மாநாடு தனது பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை கண்டுள்ளது என்றும் சமூக-பொருளாதார இலக்கை எட்ட முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.