காங்கிரஸ் எங்களுக்காக எதையும் தியாகம் செய்ய வேண்டாம்: மாயாவதி பளிச்
காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளலாம். எங்களுக்காக வேட்பாளர்களை நிறுத்தாமல் எதையும் தியாகம் செய்ய வேண்டாம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. அங்கு மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை பெறவும் மத்தியில் ஆட்சி அமைக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் அதிக்கப்படியான இடங்களில் வெற்றி பெரும் பங்கு வகிக்கும். இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உட்பட பல மாநில கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டினர். அந்த கூட்டணியில் உ.பி.யின் எதிர் எதிர் துருவங்களான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியும் இருந்தது. ஆனால் சில காரணங்களால் மெகா கூட்டணி அமையாமல் போனது.
இதனையடுத்து உத்தர பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்து பாஜகவுக்கு எதிராக லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தனர். மேலும் எஸ்பி-பிஎஸ்பி கூட்டணியில் அஜித் சங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியையும் இணைத்துக் கொண்டனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியில்லாமல் உத்தர பிரதேச மாநிலத்தில் தனித்து களம் காண்கிறது. அதற்க்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 2 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அந்த இரண்டு தொகுதிகள் ரேபரேலி மற்றும் அமேதி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல உத்தர பிரதேசம் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி ஏழு தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தபோவதாக அறிவித்துள்ளது. அதாவது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிக்கும், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி போட்டியிடும் 3 தொகுதியிலும் அவர்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் என உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
இதுக்குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியது, உத்தரப்பிரதேசம் உட்பட நாட்டின் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. இதை மீண்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி பரப்பும் பொய்யான செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.
காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளலாம். எங்களுக்காக வேட்பாளர்களை நிறுத்தாமல் எதையும் தியாகம் செய்ய வேண்டாம். எங்களுக்காக 7 இடங்களை விட்டுச்செல்லுகிறோம் என்ற தவறான கருத்தை காங்கிரஸ் பரப்ப வேண்டாம். எங்கள் கூட்டணி (சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம்) தனியாக பாஜகவை தோற்கடிப்பதற்கு தேவையான முழுமையை கொண்டுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.