காங்கிரஸ் ஆட்சியின் போது 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டன: ராஜீவ் சுக்லா
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஆறு முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டன என அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா இன்று(வியாழக்கிழமை) சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து செய்தியாளர்கள் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது, மோடி அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திவிட்டு, ஏதோ அவர்கள் மட்டும் தான் சாதனை செய்து விட்டது போல, அதை பெருமையாக பேசி வருகிறார்கள். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி உள்ளது.
முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2008 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் பாட்டல் செக்டரில் நடைபெற்றது.
இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீலம் ஆற்றின் பள்ளத்தாக்கில் நடந்தது.
மூன்றாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஜனவரி 6, 2013 அன்று சவான் பத்ரா சோதனைச் சாவடியில் நடைபெற்றது.
நான்காவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2013 ஆம் ஆண்டு ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் நஜாபிர் செக்டரில் நடைபெற்றது.
ஐந்தாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி நீலம் ஆற்றின் பள்ளத்தாக்கில் நடைபெற்றது.
ஆறாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் அமட்டி பள்ளத்தாக்கில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற்றது.
ஆறு முறை சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியும் அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பயன்படுத்தவில்லை. ஆனால் பிஜேபி அரசு ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி விட்டு, அதை அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது என மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார் காங்கிரெசின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா.