மராட்டிய சட்டசபையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே தேர்வு செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி ஆட்சி அமைத்து உள்ளது. இதில், சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில், மராட்டிய சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.  இதையடுத்து, மகா விகாஷ் முன்னணி சார்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நானா பட்டோலே சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


நானா பட்டோலே பாஜக எம்.பி.யாக பதவி வகித்தவர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதீய ஜனதா தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார். இவர் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சகோலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.


இந்நிலையில் பாஜக சார்பில் முர்பாட் எம்.எல்.ஏ. கிஷான் கத்தோரே களம் இறக்கப்பட்டார். 2 வேட்பாளர்களும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதற்கான வேட்புமனு வாபஸ் பெற இன்று காலை 10 மணி வரை இறுதி காலக்கெடு விதிக்கப்பட்டது.


அதன்படி பாஜக  வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிஷான் கத்தோரே இன்று காலை தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் மகா விகாஷ் முன்னணியின் வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே, மராட்டிய சட்டசபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.