A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்
Indian National Congress Manifesto: பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது.
Lok Sabha election 2024, Congress Manifesto: காங்கிரஸ் கட்சி வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 5) வெளியிட்டது. காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி, ராஜ்யசபா எம்.பி. சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இன்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ‘நியா பத்ரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் அறிக்கையில் 'பாஞ்ச் நியாய்' (ஐந்து நீதிக்கொள்கை) மற்றும் 'பச்சீஸ் கேரண்டி' (25 உத்தரவாதம்) அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், முதன்முறையாக, இந்தியாவின் இளைஞர்களுக்கு 'வேலைவாய்ப்பு உரிமை' வாக்குறுதியையும் அளித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு மறுக்கப்பட அம்சங்களை நிறைவேற்றும்படியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமையும். இந்த தேர்தல் அறிக்கை எந்தவித பாரபட்சம் இல்லாமல் நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் எனக்கூறிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்தார்.
மேலும் படிக்க - வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு மத்திய அரசால் தீர்வு காண முடியாது.. ப. சிதம்பரம் பதிலடி
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? தெரிந்துக்கொள்ளுங்கள்
- ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்
- 2025ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு.
- பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
- மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
- ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்.
- தேசிய அளவில் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும்.
- அங்கன்வாடி பணியிடங்களை இரட்டிப்பாகி 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டுவரப்படும்.
- LGBTQIA+ நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும்.
- திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள் களையப்படும்.
- வெறுப்பு பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை.
- மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்படும்.
- ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலைகள் தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
- மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.
- பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
- நீட், CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
- தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.
- சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
- பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
- இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் வழங்க நடவடிக்கை.
- 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- எஸ்சி (SC), எஸ்டி (ST), ஓபிஎஸ் (OBC) பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
- எஸ்சி (SC), எஸ்டி (ST), ஓபிஎஸ் (OBC) மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
- அரசு தேர்வுகள், அரசு பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
- ஒருமுறை நிவாரண நடவடிக்கையாக மாணவர்களுக்கான கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்.
- நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
- டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.
- பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்படும்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.
- 21 வயதுக்கு கீழ் உள்ள வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்.
- அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மொழிகள் சேர்க்கப்படும்.
- பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்சன் ரூ.1000 ஆக அதிகரிப்பு
- நூறுநாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.400 ஆக அதிகரிக்கப்படும்.
- விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்காக நேரடி சந்தைகள் அமைக்கப்படும்.
- குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்எஸ் சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும்.
- மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும்.
- படகுகள் பறிமுதல், மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை.
- மீனவ மக்களுக்கென தனி வங்கி, மீன்பிடிப்பதற்கென தனி துறைமுகங்கள் கொண்டுவரப்படும்.
- 10 ஆண்டுகளில் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்பபெறப்படும்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.
- தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யப்படும்.
- ராணுவ சேர்க்கைக்கான அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
- பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்.
- பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு ஜிஎஸ்டி 2.0 கொண்டுவரப்படும்.
- பிஎம் கேர்ஸ் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் விசாரணை செய்யப்படும்.
- கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பாக தேர்தல் சட்டங்கள் திருத்தம்.
- செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
- மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை.
- அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க இலக்கு.
- தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
- ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கப்படும்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
- ஊடக சுதந்திரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ