காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ராஜினாமா; பாஜகவில் இணைகிறார்
காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் மற்றும் அவரது மனைவி அமிதாவும் காங்கிரசில் இருந்து விலகியுள்ளனர். நாளை அவர்கள் பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்படுகிறது.
தனது ராஜினாமா குறித்து சஞ்சய் சிங் கூறுகையில், எங்களுக்கு காந்தி குடும்பத்துடன் நெருங்கிய உறவு இருப்பதாகவும், அந்த உறவுகளில் எந்த இடையூறும் இல்லை என்று கூறியுள்ளார். எங்களுக்கு 40 ஆண்டுகளாக காங்கிரசுடன் தொடர்பு உள்ளது. ஆனால் கடந்த 15-20 ஆண்டுகளாக கட்சியில் நிலவி வரும் சூழல், இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை. நாங்கள் மக்களவையில் இரண்டு முறையும், மாநிலங்களவையில் இரண்டு முறையும் பணியாற்றி இருக்கிறோம். எங்களது ராஜினாமா முடிவு 1-2 நாட்களில் எடுத்த முடிவு அல்ல என விளக்கம் அளித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் தகவல் தொடர்பு இல்லை, தலைமைத்துவம் காலியாகவும் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். கடந்த காலத்தில் கட்சி இயங்கி வருகிறது. நாளை என்ன நிலையில் கட்சி இருக்கும் என்பது தெரியாமல் செயல்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறத்தில், பிரதமர் மோடி "அனைவருடனும் அனைவரின் வளர்ச்சி" என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் என்ன சொல்கிறாரோ, அதை செய்கிறார். என்னை பொருத்த வரை நாட்டு மக்கள் அவருடன் இருப்பதாக நான் நினைக்கிறேன், நாட்டு மக்கள் அவர்களுடன் இருப்பதால், நானும் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். அடுத்து எனது திட்டம் பிஜேபி-யில் சேருவது குறித்து இருக்கும். அனேகமாக நாளை பாஜகவில் சேருவேன் எனவும் அவர் கூறினார்.