‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை’ : விஜயபாஸ்கர் உறுதி..!
சீனாவில் இருந்து வந்த 12 பேரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவின்போது, தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை!!
சீனாவில் இருந்து வந்த 12 பேரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவின்போது, தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை!!
சீனாவின் ஹூபே மாகாணம், வுஹான் நகரில் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 361 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளத்தில்தான் உறுதிசெய்யப்பட்டது. கொரோனா வைரஸ் உருவானதாகக் கருதப்படும் சீனாவின் வூகான் நகரில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று கடந்த 30 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டு திருச்சூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; "சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 சீனர்கள் உட்பட 10 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்புள்ள மாணவியுடன் இணைந்து பயணம் மேற்கொண்டு வந்த மாணவியும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் கரோனா வைரஸ் குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லாதபோதிலும் இவர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டோம்.
புணேவுக்குப் பிறகு சென்னை, கிண்டியில் உள்ள கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை வசதிகளைக் கொண்ட கிங் நோய்த் தடுப்பு ஆய்வகத்தில் 12 பேருடைய ரத்த மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவில் 12 ரத்த மாதிரிகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். புணேவில் உள்ள ஆய்வகத்துக்கும் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் தயார் நிலையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம். மாவட்ட அளவில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம். பள்ளி, கல்லூரிகளில் எடுக்கப்பட வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் சமூகநலத் துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை செயலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான கூட்டம் நடத்துவது குறித்து விவாதித்தோம். கரோனா வைரஸ் குறித்து நிறைய வதந்திகள் பரவுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எந்த கவலையும்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்.
சென்னையில் 10 பேர், திருச்சியில் ஒருவர், ராமநாதபுரத்தில் ஒருவர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர இன்று காலை விழுப்புரத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார். எனவே, தமிழகத்தில் மொத்தம் 13 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கென்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.