காய்ச்சலால் பெண் பாதிப்பு: 7 கி.மீ தூக்கி சென்ற சிஆர்பிஎப் வீரர்கள்
சத்தீஸ்கரில் வனப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை 7 கி.மீ தொலைவுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சத்தீஸ்கர் வனப்பகுதிகள் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம். மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
சத்தீஸ்கரின் தண்டேவடா வனப்பகுதியில் மலைப் பகுதியில் பழங்குடி இன பெண் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் செல்ல இயலாது அந்த கிராமத்துக்கு செல்ல காட்டுப் பாதைதான் உள்ளது. ஆகையால் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாது.
இதையடுத்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து தோளில் சுமந்தபடியே 7 கி.மீ நடந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஒற்றையடிப்பாதையில் ஓடைகளைக் கடந்து பெண்ணை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுமந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.