காஷ்மீர் மாநிலம் பம்போர் பகுதியில் பஸ்சில் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் இந்த மாதத்தில் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்போர் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படையினருக்கு முழு ஆதரவை தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் பயங்கரவாதிகளுக்கு உடனடி பதிலடியை கொடுக்க கேட்டுக் கொண்டனர். பாகிஸ்தான் முதலில் துப்பாக்கிசூடு நடத்தினால் தோட்டாக்களை எண்ணிக்கொண்டு இருக்கமாட்டோம் என்று ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்தார். 


இந்நிலையில் காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மருமகன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத் மருமகன் காலித் வாலீத்தான் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பயங்கரவாதி காலித் தாக்குதலுக்கு திட்டம் தீட்டினாலும் அவனுடைய கூட்டாளிகள் ஹன்ஸ்லா அடான் மற்றும் சாஜித் ஜாட் ஆகியோர் தாக்குதலை முன்நின்று நடத்தினர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.