காஷ்மீர் புல்வமாவிலும் ஊரடங்கு உத்தரவு தளர்வு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்ஹான் வானி கடந்த ஜூலை 9-ம் தேதி பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டம் நடைபெற்றது. தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறையால் 50-நாட்களுக்கும் மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பதற்றம் தணிந்திருப்பதால் புல்வமா மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹட்டா, மற்றும் குன்ஜ் ஆகிய பகுதிகளை தவிர்த்து ஏனைய இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
புல்வமாவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட போதிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு நிலைமை சீரடைந்த பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. நேற்று முதலே அங்கு வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. தனியார் கார்களும் ஆட்டோ ரிக்ஷாக்களும் அதிக அளவில் சாலைகளில் சென்றதை காண முடிந்தது. இருப்பினும், பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பொது போக்குவரத்து எதுவும் இயங்கவில்லை.இந்த முழு அடைப்பு அழைப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.