நெருங்குகிறது ஃபானி புயல்! அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயலானது நாளை அதிதீவிர புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடமேற்கு திசையை நோக்கி நகரும் அதிதீவிர ஃபானி புயல், மே 1-ஆம் தேதிக்கு பின் தனது பாதையை மாற்றி வடகிழக்கு திசையை நோக்கி பயணிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஃபானி புயலானது தமிழகம் மற்றும் ஆந்திராவில் கரையைக் கடக்காது எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசாவில் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில் ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
ஃபானி புயல் தொடர்பான நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்துவிதமான உதவிகள் அளிப்பது தொடர்பாக கேட்டறிந்தேன். தேவையான ஏற்பாடுகளை செய்ய அமைச்சரவை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்.
என பிரதமர் மோடி கூறி உள்ளார்.