ஒடிசாவில் ஃபானி புயல் இன்று கரை கடக்கிறது! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
வங்கக் கடலில் உருவான அதிதீவிர ஃபானி புயல், ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது.
வங்கக் கடலில் உருவான அதிதீவிர ஃபானி புயல், ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது.
சென்னை அருகே வங்கக்கடலில் கடந்த மாதம் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு ‘ஃபானி’ என பெயர் சூட்டப்பட்டது. ‘ஃபானி’ புயல் தமிழ்நாட்டை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ‘ஃபானி’ புயல் பாதை மாறியது.
அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
புயல் கரை கடக்கும்போது மணிக்கு 200 கிமீ வேகத்துக்கு மேல் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொல்கத்தா விமான நிலையம் இன்று இரவு 9.30 மணி முதல் சனிக்கிழமை இரவு 6 மணி வரை மூடப்படுகிறது. மேற்கு வங்காளத்தை ஒட்டியபடி வங்காளதேசத்தை நோக்கி ஃபானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.