தேசத் துரோக வழக்கில் செஹ்லா ரஷீத்தை கைது செய்ய இடைகால தடை!
தேசத் துரோக வழக்கில் JNU மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் செஹ்லா ரஷீத் என்பவருக்கு டெல்லி நீதிமன்றம் நவம்பர் 5 வரை கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளித்துள்ளது.
தேசத் துரோக வழக்கில் JNU மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் செஹ்லா ரஷீத் என்பவருக்கு டெல்லி நீதிமன்றம் நவம்பர் 5 வரை கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளித்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியும், சமூக ஆர்வலருமான செஹ்லா ரஷீத் ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. செஹ்லா ரஷீத் தனது பதிவுகளில், இராணுவத்தினர் காஷ்மீர் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை தூக்கிச் செல்வதாகவும், மக்களை சித்ரவதை செய்வதாகவும் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவஸ்தவா செஹ்லா ரஷீத்-க்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சமூக வலைதளங்களில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் எதிராக இவர் கருத்து பதிவிட்டு வருவதாகவும், இது மிகப்பெரிய தேசத்துரோக குற்றம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி செஹ்லா ரஷீத் மீது டெல்லி காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ஜாமின் கோரி செஹ்லா ரஷீத் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூடுதல் அமர்வு நீதிபதி பவன் குமார் ஜெயின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பவன் குமார் பிறப்பித்த உத்தரவில், "குற்றம்சாட்டப்பட்டுள்ள செஹ்லா ரஷீத்-க்கு இடைக்கால ஜாமின் வழங்குகிறேன். அவரை காவல்துறையினர் கைது செய்யக்கூடாது. தேவைப்பட்டால் செஹ்லா ரஷீத் காவல்துறையினர் விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 5-ஆம் தேதி நடக்கும்" எனத் தெரிவித்தார்.
நீதிபதியின் உத்தரவையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக செஹ்லா ரஷீத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விசாரணையின் போது நீதிபதி வழக்குரைஞரிடம் காவல்துறையினரிடமிருந்து இராணுவத்திற்கு ஏதேனும் புகார் வந்ததா என்று கேட்டபோது, அவர் எதிர்மறையாக பதில் அளித்தார். விசாரணையை முடிக்க காவல்துறைக்கு குறைந்தது ஆறு வாரங்கள் தேவை என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனிடையே ரஷீத் வக்கீல் தனது வாடிக்கையாளர் விசாரணையில் சேர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.