மதுபான ஊழல் வழக்கு... கடந்து வந்த பாதை... முக்கிய கைதுகள் குறித்த விபரம்!
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை கைது செய்தது. இந்த மோசடி வழக்கு குறித்தும், அது தொடர்பான கைதுகள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை கைது செய்தது. வெள்ளிக்கிழமை, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த மோசடி வழக்கு குறித்தும், அது தொடர்பான கைதுகள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
தலைநகர் டெல்லியில் 864 மதுக்கடைகள் இருந்த நிலையில், அவற்றில் 475 அரசுக்கு சொந்தமானவையாக இருந்தது. இந்நிலையில், 2021 நவம்பரில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால், புதிய கொள்கையின்படி, அரசு மது விற்பனையில் இருந்து முற்றிலும் வெளியேறி, முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய கொள்கை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, மது வியாபாரிகள் 750 மில்லி பாட்டிலுக்கு ரூ.33.35 என்ற அளவில் இலாபம் பெற்று வந்தனர். ஆனால் புதிய கொள்கை அமல் செய்யப்பட்ட பிறகு ரூ.363.27 ஆனது. இதேபோல், முன்பு ஒரு பாட்டில் ரூ.530க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ரூ.560 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக, ஒருபுறம் தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்தாலும், மறுபுறம் மதுபான விற்பனையிலிருந்து அரசுக்கு கிடைக்கும் கலால் வரி வருமானம் பெருமளவு குறைந்தது.
முன்னதாக, டெல்லி அரசு ரூ.530 மதிப்புள்ள ஒரு பாட்டிலுக்கு கலால் வரியாக ரூ.223.89 வசூலித்தது. ஆனால் புதிய கொள்கையில், மொத்த விற்பனை விலையின் மீதான கலால் வரியை அரசாங்கம் பாட்டிலின் விலையில் வெறும் 1% ஆகக் குறைத்தது. எனவே, மது வியாபாரிகள் ரூ.530 மதிப்புள்ள ஒரு பாட்டிலுக்கு ரூ.1.88 கலால் வரி மட்டுமே செலுத்தினர். அதேசமயம், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் வரியாக ரூ.30 வசூலிக்கப்பட்டது
இந்நிலையில், மதுபான கொள்கை மோசடி குறித்து, 2022 ஜூலை 8 அன்று, அப்போதைய டெல்லியின் தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதில் மனீஷ் சிசோடியா, அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான முறையில் மதுக் கொள்கையை அமல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் மூலம் உரிமம் பெற்ற மதுபான வியாபாரிகளுக்கு பெருமளவில் வருமானம் கிடைத்த அதே நேராத்தில், அரசு கருவூலத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. கலால் கொள்கை 2021-22 மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.580 கோடி இழப்பு ஏற்பட்டதாக டெல்லி தலைமைச் செயலாளர் மதிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ED பிடியில் டெல்லி முதல்வர்: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
டெல்லி தலைமைச் செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்ட குற்றசாட்டுகள்
1. அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா உரிமம் பெற்ற மது விற்பனையாளர்களுக்கு 'லஞ்சம்' மற்றும் 'கமிஷன்' போன்ற தேவையற்ற சலுகைகளை வழங்கினார்.
2. கோவிட் காரணமாக, மதுபான வியாபாரிகளின் ரூ.144.36 கோடி மதிப்புள்ள உரிமக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது.
3. விமான நிலைய மண்டலத்தில் கடைகளை திறக்க அனுமதி வழங்காத நிலையில், கடைகள் திறக்க அனுமதி கோரியவர்களுக்கு ரூ. 30 கோடி திருப்பி அனுப்பப்பட்டது. இந்தத் தொகை அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணம் ஆகும்.
4. வெளிநாட்டு மதுபானங்களின் விலையை நிர்ணயிக்கும் ஃபார்முலா மாற்றியமைக்கப்பட்டது. பீர் பாட்டில் அடங்கிய பெட்டிகளுக்கு ரூ.50 கலால் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த வரி நீக்கப்பட்டது. இதன் காரணமாக மொத்த வியாபாரிகளுக்கு வெளிநாட்டு மதுபானம் மலிவாக கிடைத்ததோடு, அரசின் வருமானம் குறைந்தது.
சிபிஐ வழக்கு பதிவு
டெல்லி தலைமைச் செயலாளரின் அறிக்கையின் அடிப்படையில் தில்லி துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். 2022, ஆகஸ்ட் 12ம் தேதியன்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், மணீஷ் சிசோடியா, மூன்று முன்னாள் அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழலில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் ஈடுபட்டது. வழக்கை பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர். 2021-22 கலால் கொள்கையால் டெல்லி அரசுக்கு ரூ.2,873 கோடி இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளன.
மதுபான ஊழல் வழக்கில் இது வரை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள்
1. 2022 செப்டம்பர் 27 அன்று விஜய் நாயரை சிபிஐ கைது செய்தது. அடுத்த நாளே சமீர் மகேந்திருவை அமலாக்கத்துறை கைது செய்தது.
2. 2023 பிப்ரவரி 26ம் தேதியன்று சிபிஐ மணிஷ் சிசோடியாவை கைது செய்தது.
3. சிபிஐக்கு பிறகு, அமலாக்கத் துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது.
4. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் 2023 அக்டோபர் 4ம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
5. 2024 மார்ச் 15ம் தேதியன்று, தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆரின் மகள் கே. கவிதா கைது செய்யப்பட்டார்.
6. தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் 2024 மார்ச் 21ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்... மக்களவை தேர்தலில் தாக்கம் இருக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ