புதுடில்லி: கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் இந்த மாதம் மே 19 ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. டெல்லிக்கு இந்த மாதம் மே 12 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் மொத்தம் ஏழு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்ப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இரண்டு கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி காந்தி நகர் எம்.எல்.ஏ., அனில் வாஜ்பாய் பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர் விஜய் கோயல் மற்றும் டெல்லி பாஜக பொறுப்பாளருமான ஷியாம் ஜஜு முன்னிலையில் அனில் வாஜ்பாய் இணைந்தார். அவருடன் சேர்ந்து மூன்று நகராட்சி ஆம் ஆத்மி கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சி டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. 


பாஜகவில் இணைந்த பிறகு அனில் வாஜ்பாய் கூறியது, 'நான் பல வருடங்களாக ஆம் ஆத்மி கட்சிக்காக உழைத்தேன். ஆனால் கட்சியில் அதற்கான மரியாதையை எனக்கு கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. கட்சி அதன் தன்மையை இழந்துவிட்டது" எனக் கூறினார்.


கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சர் விஜய் கோயல், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் எங்கள் தொடர்பில் இருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.