டெல்லி மாநகராட்சி தேர்தல்: பா.ஜனதா முன்னிலை, ஆம் ஆத்மிக்கு 2-வது இடம்
டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பா.ஜனதா, 267 வார்டுகளில் புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. ஆம் ஆத்மி கட்சி, எல்லா வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி 271 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஆனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது, காலை நிலவரப்படி பா.ஜனதா முன்னிலை பெற்று உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
பாரதீய ஜனதா கட்சி 179 வார்டுகளில் முன்னிலை பெற்று உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 44 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 34 வார்டுகளிலும் முன்னிலை பெற்று உள்ளது.
டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.