டெல்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 20 அன்று அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது ஏப்ரல் 15 அன்று 40.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.


ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 6.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, பாலத்தில் 0.6 மி.மீ., ஆயாநகரில் 2.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 87 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 32 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 19.4 டிகிரி செல்சியஸ், 36.3 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. 


இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, திங்களன்று அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்புள்ளது. டெல்லி-என்.சி.ஆரின் வானிலை முழு வாரமும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் இது பிராந்தியத்தில் வெப்பத்தை குறைக்க வழிவகுக்கும் என்றும் வானிலை துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏப்ரல் 26 க்குப் பிறகு வெப்பநிலை மீண்டும் உயரக்கூடும் என்று கணிப்பு தெரிவிக்கிறது.