புது டெல்லி: வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை நடந்த வன்முறைகள் குறித்தும் மற்றும் டெல்லி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), இன்று மதியம் 12 மணிக்கு ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்றைய வன்முறையில் டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பில் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் (Anil Baijal), மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


வடகிழக்கு டெல்லியில் உள்ள பிரஹம்புரி வட்டாரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கல் வீசும் சம்பவம் அரங்கேறியது. அதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அமித் ஷா திங்கள்கிழமை முதல் நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றிய ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அகமதாபாத்தில் இருந்து திரும்பிய பின்னர், உள்துறை அமைச்சர் நேற்று (திங்கள்கிழமை) இரவு வன்முறை குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். நேற்று இரவு 11 மணிக்கு கூட்டப்பட்ட கூட்டம் அதிகாலை 1:30 மணிக்கு தான் நிறைவடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. 


அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, புலனாய்வு பணியக இயக்குநர் அரவிந்த்குமார், டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமையை அமித் ஷா மறுபரிசீலனை செய்தார். விரைவில் இயல்புநிலையை மீட்டெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.