டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் மோடி தலைமையில் துவக்கம்!
பிரதமர் மோடி தலைமையில் 4-வது முறையாக டில்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் துவங்கியது!
மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் நான்காவது நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லி ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி தலைமையில் துவங்கியுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவதற்கான நடவடிக்கைகள், மத்திய அரசின் திட்டங்கள், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிக்க தமிழக முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.அதே சமயம், வாக்களித்தபடி சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என எதிர்ப்பு குரலை பதிவு செய்ய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சந்திரபாபு நாயுடு, இன்று தான் பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்திக்க உள்ளார். இக்கூட்டத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காதது, ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்ய சந்திரபாபு திட்டமிட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.