மத்திய அரசின் முடிவு துணிச்சலானது - அன்னா ஹசாரே பாராட்டு!!
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்திய அரசின் கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கையை பாரட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- மத்திய அரசின் இந்த முடிவு துணிச்சலானது. வேறு எந்த அரசும் செய்யாத ஒன்றை துணிச்சலுடன் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கை நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிப்பதுடன் கள்ள நோட்டுகள் புழக்கத்தையும் ஒழிக்க ஏதுவாக இருக்கும். ரூ 500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு "ஒரு புரட்சி" தான் எனவும் கூறினார். இதன் மூலம் ஜனநாயகத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். இது போன்ற துணிச்சலான முடிவை பாராட்டாமல் கெஜ்ரிவால் போன்றவர்கள் விமர்சிப்பது சரியானதல்ல என்றார்.
மேலும் அவர் கூறுகையில் அதேபோல மக்கள் பணப்பிரச்னைகளில் திண்டாடி வருவதை போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசியல் கட்சிகள் ரசீது இல்லாமல் வாங்கும் நன்கொடைகளுக்கு கணக்கு காண்பிக்க வேண்டும். விரைவில் சில மாநிலங்களில் தேர்தல் வரவுள்ளது. அந்த மாநிலங்களில் தேர்தலில் பணம் தலைவிரித்து ஆடும் நிலையை அறவே அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.