பாஜக-வின் பணம் எங்களுக்கு தேவையில்லை; மம்தா பானர்ஜி ஆவேசம்!
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை-யை சீரமைக்க பாஜக-வின் பணம் தேவையில்லை, மேற்குவங்கம் போதுமான பணம் வைத்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்!
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை-யை சீரமைக்க பாஜக-வின் பணம் தேவையில்லை, மேற்குவங்கம் போதுமான பணம் வைத்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்!
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா, நேற்று முன்தினம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோஷமிட்டனர். பல்கலை., மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். இதனையடுத்து பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தாக்குதலில் பல்லைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்து 200 ஆண்டு பழமையான ஈஷ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த கலவரத்துக்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் 19-ம் தேதி இறுதிக்கட்டமாக 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் 17-ம் தேதியுடன் முடியும். இப்போது வன்முறை காரணமாக நாளை 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில் ‘‘இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.
வன்முறையை தூண்டி விட்ட பாஜக மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த கட்சிக்கு பரிசு அளிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள உத்தரவு பிரப்பித்துள்ளது. என தெரிவித்தார்.
இதற்கிடையில் இன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும். அதற்கான அனைத்து வேலைகளையும் பாஜக செய்யும். இந்த சிலை உடைப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறி குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு அளிக்கும் விதமாக தற்போது மம்தா தெரிவிக்கையில்., "பாஜக-வின் பணத்தை மேற்கு வங்கம் வேண்டவில்லை., போதுமான பணத்தை மேற்கு வங்கம் வைத்துள்ளது. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை-யை மேற்குவங்க அரசு சீரமைக்கும் என தெரிவித்துள்ளார்.