நீதிபதிகள் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்: இந்திய பார் கவுன்சில் தலைவர்
நீதிபதிகள் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா கூறினார்.
இந்தியாவில் நீதிபரிபாலனத்தின் தலைமை பீடமாக டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் விளங்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்து வருகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் முதன்முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராக, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள 4 மூத்த நீதிபதிகள் நேற்று திடீரென்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். உச்ச நீதிமன்ற வரலாற்றில் விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருப்பதும், நீதிபதிகள் இடையே முதன் முதலாக மோதல் போக்கு ஏற்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீதிபதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டில் மத்திய அரசு தலையிடாது என மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து விட்டார். இந்த சூழலில், நீதிபதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை சுமூகமாகவும் வேகமாகவும் களைய 7 பேர் அடங்கிய குழுவை அமைப்பதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த குழுவினர் நாளை, நீதிபதிகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அவர்களை சந்திக்க உள்ளனர்.
இந்த தகவலை வெளியிட்ட இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, செய்தியாளர்கள் மத்தியில் மேலும் கூறியதாவது:- “ இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு பார் கவுன்சில் சார்பாக நான் கோரிக்கை விடுக்கிறேன். நீதித்துறையின் மதிப்பு குலைந்து போக நாங்கள் விரும்பவில்லை. நீதித்துறை மீது தளராத நம்பிக்கைய மக்கள் கொண்டுள்ளனர்.
பிரச்னையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுமக்களிடம் வெளிப்படுத்தியிருக்கக்கூடாது. நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என பிரதமர், சட்ட அமைச்சர் கூறியது வரவேற்கத்தக்கது.