உள்நாட்டு விமான சேவை வரி உயர வாய்ப்பு
மத்திய அரசின் கூடுதல் வரி விதிப்பின் மூலம் உள்ளூர் விமானக் கட்டணங்கள் உயரத்த வாய்ப்புள்ளது.
புதுதில்லி: மத்திய அரசின் கூடுதல் வரி விதிப்பின் மூலம் உள்ளூர் விமானக் கட்டணங்கள் உயரத்த வாய்ப்புள்ளது.
விமான போக்குவரத்தின் மூலம் சிறிய நகரங்களை இணைக்கும் "உடான்" திட்டத்தை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. குறைந்த கட்டணத்தில் மண்டல ரீதியிலான (RCS) விமான சேவை அளிக்கும் இத்திட்டத்தின் படி, 2,500 ரூபாய் பயண கட்டணத்தில் ஒரு மணிநேர விமானப் பயணம் மேற்கொள்ள முடியும். சாதாரண மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வழிவகை செய்யும் இந்த திட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும்.
மேலும், இந்த பிராந்திய இணைப்பு திட்டத்தின் (RCS) கீழ் விமானங்களில் கட்டணம் 1,420 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை இருக்கும். ஹெலிகாப்டர்களில் 30 நிமிட பயணக் கட்டணம் 2,500 ரூபாயாகவும் மேலும் ஒரு மணி நேரப் பயணத்திற்கு 5,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படும். இந்த திட்டத்தின் நிதி ஆதாரத்திற்காக வரி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிராந்திய இணைப்புத் திட்டத்துக்கு (RCS) நிதி திரட்டும் பொருட்டு, 1,000 கி.மீ வரையிலான பயணத்துக்கு 7,500 ரூபாய் வரியும், 1,000 - 1,500 கி.மீ வரையிலான பயணத்துக்கு 8,000 ரூபாய் வரியும், 1500 கி.மீக்கு 8,500 ரூபாய் வரியும் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், உள்ளூர் விமானக் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.