காங்கிரஸ் பட்டியல்: பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவாரா? மாட்டாரா?
2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டப்பட்டது. அதில் பிரியங்கா காந்தி குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை.
17_வது மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை முடியும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த வாரத்தின் இறுதியில் 2019 மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும், ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பல கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி தினமும் மக்களுக்காக பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார். இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வர இருக்கிறார்.
இந்தநிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று காங்கிரஸ் வெளியிட்டது. இந்த முதல் பட்டியலில் 15 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் 11 பேர் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுபவர்கள் மற்ற நான்கு வேட்பாளர்கள் குஜராத்தில் போட்டியிடுபவர்கள் ஆவார்கள்.
11 வேட்பாளர்கள் கொண்ட உத்தர பிரதேசத்தில் பட்யலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதில் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும், சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகின்றார்.
ஆனால் முதல் முறையாக கட்சியில் பதவி அளிக்கப்பட்ட சோனியாவின் மகள் பிரியங்கா காந்திக்கு எந்த தொகுதியும் அறிவிக்கப்பட வில்லை. 80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் வெறும் 11 கொண்ட வேட்பாளர்கள் பட்டியலே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது பிரியங்கா காந்தியின் பெயர் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.
பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், அவர் கட்சியின் பொறுப்புகளை கவனித்துகொள்வார் என்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள். ஆனால் சரியான நேரத்தில் பிரியங்கா காந்தி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படும் என்றும், அதுக்குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றும் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதைப்பார்க்கும் போது பிரியங்கா காந்தியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
கடந்த சனவரி 23 ஆம் தேதி முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். பின்னர் "மிஷன் உத்தர பிரதேசம்" என்ற தேர்தல் பிரசாரத்திலும் முதல் முறையாக ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தை பொருத்த வரை மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கிறது. மறுபுறத்தில் பாஜக தலைமையிலான ஒரு அணி மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பலம் தான்.