ரயில் டிக்கெட், போர்டிங் பாஸ்களில் மோடி படம்: விளக்கம் கேட்டு ரயில்வேக்கு EC நோட்டீஸ்!!
ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!!
ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!!
பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த ரயில் டிக்கெட்கள் மற்றும் போர்டிங் பாஸ்கள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த அறிவிப்பு வெளியான மார்ச் 10 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் ரயில்வே டிக்கெட் மற்றும் விமானத்தில் பயணிக்க வழங்கப்படும் போர்டிங் பாஸ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.
இந்நிலையில் இந்த டிக்கெட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இது குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 27 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம் இடம் பெற்றது குறித்து விளக்கம் கேட்டு ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் தரப்படுவது பற்றி பதிலளிக்கவும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் தரப்படுவது பற்றி கடந்த சில தினங்களுக்கு முன் புகார் எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த ரயில்வே நிர்வாகம் கவனக்குறைவாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், இந்த டீ கப்கள் வாபஸ் பெறப்படும் எனவும் விதிமீறலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.