கருப்புப் பணத்தை தேர்தலில் புழங்க விடும் பிரமுகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு உதவி அதிகாரி வீடு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கை என்ற எதிர்க்கட்சியினரின் புகாரையடுத்து வருவாய்த்துறை செயலருக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சகம், உறுதியான தகவல்களின் அடிப்படையில்தான் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.


வருவாய்த்துறை செயலாளர் ஏ.பி.பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து விளக்கம் அளித்தனர். இந்த நடவடிக்கைக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்றும் துறை சார்ந்த நடவடிக்கைதான் என்றும் உறுதியான தகவல்களின் அடிப்படையில்தான் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேலின் ஊழியரான எஸ்.எம்.மொய்னிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் வீட்டில் சோதனை நடத்திய போது அகமது பட்டேல் அங்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் விளக்கம் கேட்ட பின்னர் தேர்தல் ஆணையம் உறுதியான தகவல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று அனுமதியளித்துள்ளது. கருப்புப் பணப்புழக்கம் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.