இந்திய ராணுவ வீரர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  ராணுவத்தினரின் படங்களை பிரச்சாரத்தில் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.


மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் தேர்தல் தேதிகள், பாதுகாப்பு, வாக்காளர் பட்டியல் உள்பட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. ஏப்ரல், மே மாதங்களில் ஏழு அல்லது எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டவுடன், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும், காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடத்தப்பட வாய்ப்புள்ளது.




இதனிடையே, ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் படங்களை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சில அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவ வீரர்களின் பெயர்களையும் படங்களையும் பயன்படுத்துவதாக வந்த புகார்களையடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியது.


இதனையடுத்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திலும் விளம்பரத்திலும் ராணுவ வீரர்களின் படங்களைப் பயன்படுத்த் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டின் முன்வரிசை பாதுகாவலர்கள் என்றும், அவர்கள் அரசியல் சார்பற்றுச் செயல்படக்கூடியவர்கள் எனவும், ஜனநாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.