மார்ச் முதல் வாரத்தில் மக்களவை தேர்தல் அட்டவணை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம்
வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் அறிவிப்பை அறிவிக்கலாம் எனத் தகவல்.
தற்போதைய மக்களவையின் காலம் வரும் ஜூன் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைக் கருத்தில் கொண்டு, எந்த மாதத்தில், எத்தனை கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தலாம் மற்றும் மக்களவை தேர்தலுடன் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடத்துவது குறித்த செயல்முறையை மத்திய தேர்தல் கமிஷன் ஆரம்பித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி மக்களவை தேர்தல் நான்கு கட்டங்களாகவும், 2009 ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி 5 கட்டங்களாகவும், 2014 ஆம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி 9 கட்டங்களாகவும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, வரும் மக்களவை தேர்தல் எப்பொழுது நடைபெறும். அதற்கான தேதிகள் எப்பொழுது அறிவிக்கப்படும் என்ற கேள்விகள் எழுப்பட்டு வந்தன.
இந்தநிலையில், தேர்தல் ஆணையம் பொதுத்தேர்தல்கள் நடத்தும் நேரத்தையும் கட்டத்தையும் தீர்மானிப்பதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளது என்று ஆதாரங்கள் கூறுகின்றன. பொதுத்தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆந்திரா, ஒடிசா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. அதேபோல சிக்கிம் சட்டமன்றமும் மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. எனவே இந்த மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடத்த ஆலோசனை செய்யப்படுகிறது. ஆனால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேர்தல் நடத்துவது என்பது, மாநிலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தன்மையை சார்ந்துள்ளது.