மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தக் கூட்டத்திற்கு இந்தியா முழுவதிலுமுள்ள கட்சிகளின் சார்பாக பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு  நடக்கும்போது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கும், குறிப்பிட்ட சின்னத்தில் மட்டுமே வாக்குகள் அனைத்தும் பதிவாகிறது என்கிற சர்ச்சை எழுந்தது. இதனால் மீண்டும் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி அந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து வலியுறுத்தினர். 


இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி முறைகேடுகள் நடக்கிறது என்று டெமோ செய்து காட்டினார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி பயன்படுத்திய இயந்திரம் போலியானது என்று பதிலடியும் கொடுத்தது. 


இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன், ஒருவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிய அவருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரத்தை இணைக்கவும் முடிவு செய்துள்ளது. 


தேர்தலில் வாக்காளருக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்வது பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 


இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் பற்றி தேர்தல் கமிஷன் அஜெண்டா வெளியிட்டுள்ளது. அதில்:-


> மின்னணு ஓட்டு எந்திரங்கள்.


> ஒருவர் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுப்பதிவு செய்ததை உறுதிப்படுத்தி ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள்.


> தேர்தலில் லஞ்சம் கொடுப்பதை, வாங்குவதை பிடிவாரண்டு இன்றி கைது செய்யும் குற்றமாக அறிவித்தல்.


> தேர்தலில் லஞ்சம் தந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே, தகுதி நீக்கம் செய்தல்.


> ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திர பதிவுகளை மறு எண்ணிக்கை செய்வதற்கான விதிமுறைகள்.


தேர்தல் கமிஷன் நடத்துகிற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.


இக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரு அணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தவிர திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கின்றன.