தேசத் தந்தையின் பிறந்த நாள்: `பத்யாத்ரா` தொடங்கிய ராகுல் காந்தி
காந்தியின் எண்ணங்களையும், கோட்பாடுகளையும் மக்களிடம் எடுத்து செல்ல காங்கிரஸ் சார்பாக `பத்யாத்ரா` (Padyatra).
புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி தலைமையில் 'பத்யாத்ரா' (Padyatra) என்ற பெயரில் ஊர்வலமாக செல்கின்றனர். அந்த யாத்ராவில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த ஊர்வலம் டெல்லி ராஜீவ் பவனில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் தொடங்கி காந்தியின் நினைவிடம் ராஜ்காட் வரை நடக்கிறது. 'பத்யாத்ரா' மூலம் காந்தியின் எண்ணங்களையும், கோட்பாடுகளையும் மக்களிடம் எடுத்து செல்வோம் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று நாடு முழுவதும் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் அவரை வணங்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் காந்திஜியை குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் சோனியா காந்தி உட்பட பல தலைவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தநிலையில், முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
அவரது 150வது பிறந்த நாளில், மகாத்மா காந்திஜிக்கு எனது அஞ்சலி, “தேசத்தின் தந்தை”, அவரது வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு வழியை காட்டியுள்ளார். வன்முறை, ஒடுக்குமுறை, மதவெறி மற்றும் வெறுப்பைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழி "அன்பு" என்பதை நமக்குக் காட்டினார் எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல பிரதமர் மோடியும், தனது ட்விட்டர் பக்கத்தில்,
"மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவிற்கு வணக்கம்... "மகாத்மாவின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்" என்றும், மனிதகுலத்திற்கு காந்திஜியின் பங்களிப்புக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என ட்வீட் செய்துள்ளார். அதனுடன், காந்திஜியின் வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.