பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி: நிதியமைச்சர் அருண் ஜேட்லி!
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்கான பிரத்யேக பத்திரங்களை வெளியிடுவது தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் ஒருவரிடமிருந்து ரூ.2,000 வரை மட்டுமே ரொக்கமாக பெற அனுமதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்கான பிரத்யேக பத்திரங்களை வெளியிடுவது தொடர்பான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
இதில் அரசியல் கட்சிகளுக்கு தனி நபர்களும் நிறுவனங்களும் நிதி தருவதை வெளிப்படையாக்குவது தொடர்பான நடைமுறைகள் இடம்பெற்றுள்ளது. இதன்படி கட்சிகளுக்கான நன்கொடைகள் பத்திரங்கள் மூலமாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் இப்பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான பத்திரங்கள் வங்கிகளில் விற்கப்படும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வெளியான நிலையில் பத்திரங்கள் மூலம் நிதி தரும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.