டெல்லியில் இன்று சுவாமி விவேகானந்தர் சிகாகோ இந்து சமய மாநாட்டில் உரை நிகழ்த்தியதன் 125 வது ஆண்டு தினம் மற்றும் பாஜக தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு  மாணவர் மாநாடு நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"யங் இந்தியா, நியூ இந்தியா" என்பதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 


9/11 என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல், ஆனால் 9/11 எனும்போது நம் நினைவுக்கு வருவது 1893 ஆண்டு அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை கூறிய விவேகானந்தரின் பேச்சு. 


விவேகானந்தரின் கொள்கைகள் இன்றளவிலும் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.


‘பிற மனிதர்களுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்குச் சமம் என விவேகானந்தர். அவர் இந்தியாவிற்கு புது அடையாளத்தை அளித்தார். தூய்மை இந்தியா இயக்கத்தை இதனுடன் ஒப்பிட்டார்.


இன்று உலகம் முழுவதும் இந்திய இளைஞர்கள் வெற்றி கொடி நாட்டி, ஒன்றுமையின் வலிமையை காட்டுகிறார்கள். 


வந்தே மாதரம் சொல்வதற்கான உரிமையை நாம் முதலில் பெற வேண்டும். முதலில் பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருங்கள். பிறகு வந்தே மாதரம் என முழக்கமிடலாம். 


முதலில் கழிப்பறைகளை கட்டுங்கள். பிறகு கோயில்களை கட்டலாம். இந்தியாவை தூய்மைப்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும். இளைஞர்கள் தான் இந்த நாட்டின் பலம். இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. அவர்களின் திறமையை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும்.


இன்றும் விவேகானந்தர் இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார். முதலில் விதிகளை கடைபிடியுங்கள். அப்போது தான் நாட்டை ஆள முடியும். தேசப்பற்றின் முக்கிய நோக்கமே நாட்டிற்காக உழைப்பது தான். நாட்டை தூய்மைப்படுத்தும் பணியில் இருப்போம் தான் உண்மையில் இந்தியாவின் பிள்ளைகள்.


இவ்வாறு அவர் பேசினார்.