புது டெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களின் பட்டியலை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்பேரில் குடியரசு தலைவரும் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அமைச்சர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.


இந்தநிலையில், மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றவுடன், முதல் மக்களவை கூட்டத்தொடர் ஜூன் மாதம் நடைபெறும் எனக் கூறப்பட்டு உள்ளது. அதாவது ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை என பத்து நாட்கள் மக்களவை கூட்டத்தொடர் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ தேதிகள் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றவுடன் அறிவிக்கப்பட உள்ளது.