விமானப்படை முன்னாள் தளபதி தியாகிக்கு ஜாமின் கிடைத்தது
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப்படை முன்னாள் தலைவர் தியாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
புதுடெல்லி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப்படை முன்னாள் தலைவர் தியாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என எஸ்.பி தியாகிக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள பின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் இருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற பெயர்கொண்ட 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க 2010-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையில், முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி கமிஷன் பெற்று இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட எஸ்.பி. தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் தியாகி, வக்கீல் கவுதம் கேதான் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களின் விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில் இன்று மூவரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, அவர்களை டிசம்பர் 30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம் அவர்கள் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. எஸ்.பி. தியாகி உள்ளிட்டவர்களை ஜாமினில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.