ஆம் ஆத்மி வேட்பாளர் ஆதிஷி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 6-ஆம் கட்ட ஓட்டுப்பதிவு வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே நாளை(மே 10) அங்கு பிரசாரம் ஓய்கிறது. 


இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் காம்பீர், தன்னை கீழ்த்தரமாக விமர்சித்து துண்டு பிரசுரம் செய்துள்ளதாக கண்ணீர் விட்டு அழுதார்.



தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் காம்பீர், தன்னை கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்து, லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார் எனவும், கடுமையான வார்த்தையால் தன்னை விமர்சித்துள்ளார் எனவும் குறிப்பிட்டார். குறிப்பாக அதில் ஆதிஷி மாட்டு இறைச்சி உண்பவள், பாலியல் தொழிலாளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


இவ்வாறு கீழ்தரமான செயல்களில் அவர் ஈடுபடுவார் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும், அவரை போன்றவர்கள் பதவிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும் என்றும் கண்ணீர் விட்டு கேள்வி எழுப்பினார்.


இதற்கு ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் ஆதிஷியின் குற்றச்சாட்டை காம்பீர் மறுத்துள்ளார்.


இதுகுறித்து காம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில் 'நான் இதை செய்தேன் என்பதை ஆதிஷி, கெஜ்ரிவால் நிரூபித்தால், நான் வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். நிரூபிக்காவிட்டால் நீங்கள் அரசியலிலிருந்த விலகுகிறீர்களா' என பதிவிட்டுள்ளார்.