Team India: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவிய நிலையில், கடைசி போட்டியில் இந்த வீரர்களை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என தற்போதே கோரிக்கை எழுந்து வருகிறது.
India National Cricket Team: பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடரில் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஜன.3ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெறும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய அணி மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் கடந்த நவம்பர் 22ஆம் தேதி தொடங்கியது.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 4ஆவது போட்டி மெல்போர்ன் நகரில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. 5ஆம் நாளான இன்று இந்திய அணி 340 ரன்கள் என்ற இலக்கை துரத்தியது.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 12.5 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில், இந்திய அணி ஆல்அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என தொடரில் முன்னிலை பெற்றுவிட்டது. ஆஸ்திரேலியா ஏறத்தாழ சமன் செய்துவிட்டது. அடுத்த போட்டியில் தோற்றாலும் அந்த அணிக்கு பெரியளவில் நெருக்கடி இல்லை எனலாம்.
அப்படியிருக்க, அடுத்த போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிட்னியில் நடைபெறும் 5ஆவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் இருந்து இந்த 2 வீரர்களை இந்திய அணி நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
முகமது சிராஜ்: சிராஜ் இந்த தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 16 விக்கெட்டுகளை எடுத்தாலும் சராசரி 31.43 ஆக உள்ளது. இதன்மூலமே அவரது பந்துவீச்சு பெரியளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம். புது பந்திலும் சிராஜ் பெரிதாக அச்சுறுத்தும் வகையில் பந்துவீசுவதில்லை. தொடர்ந்து சிராஜ் விளையாடி வருவதால் அவருக்கு சற்று ஓய்வு தேவை எனலாம். எனவே, வரும் சிட்னி டெஸ்டில் சிராஜிற்கு பதில் பிரசித் கிருஷ்ணாவை கொண்டு வரலாம். உயரமான ஒரு பந்துவீச்சாளர் புதிய பந்திலும் கைக்கொடுப்பார் என்பதால் அவரை முயற்சிக்கலாம்.
ரோஹித் சர்மா: கேப்டனை எப்படி நீக்க முடியும் என நீங்கள் கேட்கலாம். ஆனால், அணியில் நலன் கருதி அடுத்த போட்டியில் ரோஹித்திற்கு ஓய்வளிப்பதே நல்லது. இதனால் கில் மீண்டும் அணிக்குள் வரலாம். கேஎல் ராகுல் ஓப்பனராகவும் செல்லலாம். ரோஹித் சர்மா ஓய்வு, பேட்டிங் ஆர்டரில் மட்டுமின்றி கேப்டன்ஸியிலும் இந்திய அணிக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் எனலாம்.
அடுத்த போட்டியில் இந்த இருவரை தூக்குவது இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பை பிரகாசமாக்கும். கம்பீர் சில கடினமான முடிவுகளை எடுக்க தயார் என்றால் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் ஓய்வு கொடுத்து சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரேலுக்கு ஒரு வாய்ப்பை வழங்கலாம். இந்த மாற்றங்களை இந்திய அணி செய்வதற்கு 1% வாய்ப்புதான் இருக்கிறது என்றாலும் இது இந்திய அணிக்கு நல்ல பலனை தரும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.