கோவா சட்டமன்றம் பாஜக vs காங்கிரஸ்: ஆட்சி அமைப்பது யார்?
கோவாவில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிருப்பிக்க முயற்சியில் ஈடுபட்டு உள்ளன
கடந்த 2017 ஆம் ஆண்டு 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. ஆனால் போட்டியிட்ட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 16 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 14 இடங்களை வென்றிருந்த பாஜக அடுத்த இடத்தை பிடித்தது. அதிக இடங்களை பெற்ற எங்களை(காங்கிரஸ்) ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் கோவா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 16 மாதங்களா பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கோவா மாநிலத்தை பொருத்த வரை பிஜேபி 14 இடங்கள், அதன் கூட்டாளிகள் கோவா பாபர் பார்ட்டி 3 இடங்கள், மஹாராஷ்ட்ரவாடி கோமந்தக் கட்சி 3 இடங்கள், மூன்று சுயேட்சை உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ என மொத்தம் பாஜக தலைமையில் 24 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு சட்டமன்றத்தில் 16 எம்.எல்.ஏக்கள் மட்டும் உள்ளனர்.
இந்தநிலையில், கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அரசு சம்மந்தப்பட்ட வேலைகளை அவரால் சரிவர கவனிக்க இயலவில்லை என தெரிவித்து, அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முதல்வர் மனோகர் பரிக்கர் உடல் நலமில்லாமல் இருக்கும் நிலையில் அவரது பணிகளை மேற்கொள்ள யாரும் இல்லை. எனவே காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
நேற்று(திங்கள்கிழமை) கோவா ராஜ் பவனில் காங்கிரஸ் தனது கடிதத்தை சமர்ப்பித்து உள்ளது. இன்னும் இதுக்குறித்து ஆளுநர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆளுநரின் முடிவை பொறுத்தே அடுத்த கட்டநடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.
தற்போது கோவாவில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை நிருப்பிக்க முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.